வாகனங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பு ஆசனப் பட்டிகளை அணிவது இன்று சனிக்கிழமை (20) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
அதற்கமைய, வாகனங்களை செலுத்தும் போது ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாவதுடன், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் உள்ள அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிவது அவசியமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களின் முன் ஆசனங்களில் பயணிப்பவர்கள் மாத்திரமன்றி, பின் ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிவதை கட்டாயமாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நேற்றுடன் (19) நிறைவடைந்துள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, சாதாரண வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதியும், முன் ஆசனத்தில் பயணிக்கும் மற்றைய பயணியும் ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாகும்.
அதேநேரம், அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் சாரதி மற்றும் அதில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் ஆசனப் பட்டிகளை அணிந்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
