21.8 C
Scarborough

கட்டட அனுமதியின்றி அமைக்கப்படும் அரச கட்டடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை !

Must read

அரச திணைக்களங்கள் தான் அதிகளவில் உள்ளூராட்சிச் சட்டங்களை மீறுகின்றன. அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணங்களில் 90 வீதமானவை உள்ளூராட்சி மன்றங்களின் கட்டட அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை. அவ்வாறான திணைக்களங்கள் தண்டத்துடன் உள்ளூராட்சிகளின் அனுமதியைப் பெறவேண்டும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (19) யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம், அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசியபோதே நிரோஷ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

ஆளுநர் அவர்களது அறிவுறுத்தலின் பிரகாரம், எமது சட்டங்களின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட கட்டடங்களுக்கு வியாபார உரிமம் வழங்கப்படுவதாயின் குடிபுகு சான்றிதல் பெற கட்டாயப்படுத்துகின்றோம்.

இவ்விடயத்தில் ஆளுநர் அவர்களின் அறிவுறுத்தல் வரவேற்கத்தக்கது. மக்கள் மட்டுமல்ல அரச நிறுவனங்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் சட்டத்துக்குக் கட்டுப்படவேண்டும்.

சட்டங்களை உச்சமாக மக்கள் மீது மட்டும் பிரயோகித்து நாம் சட்டத்தின் ஆட்சி என புளகாங்கிதம் அடைய முடியாது. அரச நிறுவனங்களின் கட்டுமானங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும்.

ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் அரச கட்டடங்கள் உள்ளூராட்சியின் அனுமதி பெறாதுள்ளது. அவற்றுக்கு குடிபுகு சான்றிதழ் இல்லை. பாடசாலைகள் கூட அனுமதி பெறுவதில்லை.

ஆகவே இக்கட்டடங்களில் சுகாதாரம், உரிய பாதுகாப்பு, பயன்பாட்டு அங்கீகாரம் இன்றி தான்தோன்றித்தனமாக உள்ளூராட்சிச் சட்டங்களை மீறி பல அரச நிறுவனங்கள் செயற்படுகின்றன.

தனியாரின் கட்டடங்கள் தொடர்பாக நீதிமன்றம் சென்று இடித்தளிப்பதற்கான அனுமதியைப் பெறும் எமது உள்ளூராட்சி மன்றங்கள், அரச தாபனங்கள் விடயத்தில் மக்களுக்கு மட்டும் சட்டம் ஏனையோருக்கு விடுபாடு என கூற இயலாது.

ஆகவே அமைக்கப்பட்ட அரச கட்டுமானங்கள் தொடர்பில் விரைவாக பரிசீலித்து, அவற்றுக்கு அனுமதி அளிக்க நாம் தயார். நாம் சில நெகிழ்ச்சிப் போக்கினைக் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article