10.7 C
Scarborough

அவுஸ்திரேலியாவின் புதிய விமான நிலையத்திலிருந்து முதல் சர்வதேச விமானம் புறப்பட்டது!

Must read

அவுஸ்திரேலியாவின் சிட்னியின் வேகமாக வளர்ந்து வரும் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பல பில்லியன் டொலர் மதிப்பிலான புதிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை (26) முதலாவது சர்வதேச விமானம் புறப்பட்டுள்ளது.

நான்கு தசாப்தங்களுக்கும் மேலான திட்டமிடலுக்குப் பின்னர் உருவாக்கப்பட்டுள்ள வெஸ்டர்ன் சிட்னி சர்வதேச விமான நிலையம், ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் சிட்னியின் பிரதான விமான நிலையத்திற்கு மாற்றாக உருவாக்கப்பட்டுள்ள முதல் விமான நிலையமாகும்.

நியூசிலாந்தின் ஓக்லாந்திலிருந்து வந்த ஏர் நியூசிலாந்து விமானம் இன்று காலை விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், சிறிது நேரத்திலேயே அங்கிருந்து மீண்டும் புறப்பட்டது. இதன் மூலம் சிட்னியின் தொழிலாளர் வர்க்கத்தினர் அதிகம் வசிக்கும் மேற்கு புறநகர்ப் பகுதிக்கு வாரத்திற்கு மூன்று விமானங்கள் இயக்கப்படும் சர்வதேச சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் புதிய சர்வதேச விமான நிலையத்தின் திறப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பு தினமும் கிடைப்பதில்லை” என ஏர் நியூசிலாந்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி கேட் போயர் தெரிவித்துள்ளார்.

“மேற்கு சிட்னியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். அவுஸ்திரேலியாவுக்கு வரும் பயணிகள் நாட்டின் அனைத்து சிறப்புகளையும் கண்டறிவதற்கான கூடுதல் நுழைவாயிலாகவும் இது அமையும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவின் முதலாவது புதிய முக்கிய விமானப் போக்குவரத்து மையமான இந்த ஒற்றை ஓடுதள விமான நிலையம், நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) உள்நாட்டு விமானச் சேவைகளை ஆரம்பித்திருந்ததுடன், ஜூலை மாதத்தில் சரக்கு விமானச் சேவைகளையும் தொடங்கியிருந்தது.

சிட்னியின் பிரதான விமான நிலையமான கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித் (Kingsford Smith) அவுஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும். அதன் மூன்று ஓடுதளங்கள் கடந்த ஆண்டு 42 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கையாண்டுள்ளன.

நகர மையத்திலிருந்து சுமார் 9 கிலோமீற்றர் தொலைவில் பாட்டனி பே பகுதியில் அமைந்துள்ள கிங்ஸ்ஃபோர்ட் ஸ்மித் விமான நிலையத்தைப் பயன்படுத்தும் விமானங்கள் குடியிருப்புப் பகுதிகளுக்கு மேலாகப் பறப்பதால், இரவு நேர விமானச் சேவைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனினும், மேற்கு சிட்னியில் அமைந்துள்ள புதிய விமான நிலையத்திற்கு இத்தகைய இரவு நேர கட்டுப்பாடுகள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

“எங்களது 24 மணி நேர செயல்பாடுகள் மூலம், வெஸ்டர்ன் சிட்னி சர்வதேச விமான நிலையம் விமான நிறுவனங்களுக்கு உலகளாவிய மையங்களுடன் இணைவதற்கும், பயணிகள் உலகின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கான கூடுதல் தெரிவுகளைப் பெறுவதற்கும் அதிக நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது” என விமான நிலையத்தின் தலைமை நிர்வாகி சைமன் ஹிக்கி தெரிவித்துள்ளார்.

குவாண்டாஸ் நிறுவனத்தின் குறைந்த கட்டண விமானச் சேவையான ஜெட்ஸ்டார், அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட், மெல்போர்ன் மற்றும் பிரிஸ்பேன் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கு விமானச் சேவைகளை இயக்கி வருகிறது.

மேலும், கத்தார் ஏர்வேஸ் 2027 டிசம்பர் முதல், பிஜி ஏர்வேஸ் 2027 மார்ச் முதல், வியட்ஜெட் ஏர் 2027 ஜனவரி முதல் சர்வதேச விமானச் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுற்றுப்புறப் போக்குவரத்து உட்கட்டமைப்பைத் தவிர்த்து, 5.3 பில்லியன் அவுஸ்திரேலிய டொலர் (3.7 பில்லியன் அமெரிக்க டொலர்) செலவில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை தற்போது வீதி வழியாக அணுக முடியும்.

எனினும், குறைந்தபட்சம் 2027 டிசம்பர் வரை நேரடி ரயில் இணைப்பு எதிர்பார்க்கப்படவில்லை. அதுவரை பயணிகள் பேருந்துகள், கார்கள் மற்றும் வேன்கள் உள்ளிட்ட வீதி மார்க்கப் போக்குவரத்து மூலமே விமான நிலையத்தை அடைய வேண்டிய நிலை காணப்படும்.

புதிய விமான நிலையம் அவுஸ்திரேலியாவுக்கு ஒரு “அற்புதமான புதிய அத்தியாயம்” என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார்.

சிட்னியின் புகழ்பெற்ற துறைமுகம் மற்றும் மத்திய வணிகப் பகுதியால் நீண்ட காலமாக அதிக கவனம் பெற்றிருந்த நிலையில், மேற்கு சிட்னிக்கு இந்த விமான நிலையம் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்புகளையும் கொண்டு வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மிக நீண்ட காலமாக, சிட்னி தனது கவனத்தைத் துறைமுகம் மற்றும் மத்திய வணிகப் பகுதியின் மீதே செலுத்தியிருந்தது. இந்தத் திட்டம் அதை மாற்றி, மக்கள் வாழும் இடமாகவும், வேலைவாய்ப்புகள் உருவாகும் இடமாகவும், முதலீடுகள் வரும் இடமாகவும் உள்ள மேற்கு சிட்னியின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளது” என அவுஸ்திரேலிய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article