இந்தியாவின் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று திங்கட்கிழமை (26) இரவு கைதிகள் 17 பேர் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு, சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களில் இதுவரை 4 கைதிகள் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
குழுவாக சேர்ந்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்ற கைதிகளில் 4 பேர் பிடிபட்டிருக்கும் நிலையில், எஞ்சிய 13 பேரை கண்டுபிடித்து சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிர இறங்கியிருக்கின்றனர். இதற்காக 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தப்பி ஓடிய கைதிகளை பிடிப்பதற்காக தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர சோதனை மற்றும் வாகன தணிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பேருந்து நிலையங்கள், பொதுமக்களின் அதிகம் கூடும் சன நெரிசலான இடங்களில் பொலிஸார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையிலிருந்து தப்பி ஓடிய கைதிகளில் பலர் மதுரை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதால் அந்த மாவட்டங்களிலும் தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
