மூதூருக்கும் திருகோணமலைக்கும் இடையே சேவையில் ஈடுபட்டு வந்த தனியார் பேருந்து திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி பயணிக்கும்போது மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 22 க்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்துச் சம்பவம் புதன்கிழமை (22) மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பேரூந்து திருகோணமலையில் இருந்து மூதூர் நோக்கி ஏ15 வீதியின் ஊடாக பயணிக்கும்போது கங்கைத்துறை பாலத்திற்கு முன்பாக வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் காயமடைந்த 22க்கும் மேற்பட்டோர் மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 12பேர் பெண்கள் எனவும் விபத்தில் சாரதிக்கு பலத்த காயம் ஏற்பட்டு எலும்பு முறிவுகளும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.
குறித்த பேரூந்தில் 35க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். விபத்து இடம்பெற்றதாகவும் பயணிகள் சிலர் தெரிவிக்கின்றனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

