அரசாங்கம் அவசரகால சட்டத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று கூடிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மிகுந்த நாட்டையே நாம் பொறுப்பேற்றோம்.
இருப்பினும் நாட்டு மக்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலேயே நாம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்.
அதற்கு சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்ட, வங்குரோத்து அடைந்த, நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி அடைந்த நாட்டையே பொறுப்பேற்க வேண்டியிருந்தது.
அதேபோன்று டிட்வா சூறாவளி தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த சூழ்நிலையால் எம்முடைய நாட்டிற்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்தி நாட்டு மக்களை முன்னோக்கிய பாதைக்கு இட்டுச்செல்லும் நோக்கிலேயே நாம் அவசரகால சட்டத்தை நீடித்துள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

