6.9 C
Scarborough

ஜனாதிபதியின் உரை நாட்டின் கௌரவத்தை பாதிக்கிறது!

Must read

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் நாட்டின் கௌரவத்தைச் சீர்குலைத்துள்ளதாகவும், அவர் ஒரு ‘ஹுண்டு’ (சிறிய அளவை) ஜனாதிபதியாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தெல்தெனிய தொகுதி அமைப்பாளர் மகேஷ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (04) எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நாட்டின் தலைவராக இருந்து கொண்டு, தான் ஆட்சி செய்யும் நாட்டை ‘ஹுண்டு’ என்று ஜனாதிபதி வர்ணிப்பதன் மூலம், மக்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் மரியாதை நாளுக்கு நாள் குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நாம் ஒரு ‘ஹுண்டு’வின் குடிமக்கள் அல்ல எனவும், இலங்கையை நேசிக்கும் மற்றும் நாட்டின் மீது பெருமை கொள்ளும் அபிமானமுள்ள குடிமக்கள் எனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி இன்னும் எதிர்க்கட்சியில் இருந்ததைப் போலவே நடந்துகொள்வதாகவும், நாட்டில் ஒரு நெருக்கடி ஏற்படும்போது பாராளுமன்றத்திற்கு வந்து எதிர்க்கட்சியினரை மிரட்டிவிட்டுச் செல்வதையே அவர் வழக்கமாகக் கொண்டுள்ளதாகவும் மகேஷ் சேனநாயக்க குற்றம் சாட்டினார்.

ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) வரலாற்றை நினைவூட்டிய அவர், 1971 மற்றும் 88-89 காலப்பகுதிகளில் பிக்குகள், அதிபர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் கொலை செய்து, பொதுச் சொத்துக்களை அழித்தவர்கள் அவர்களே என்றும், அந்த குறுகிய மனநிலையே இன்றும் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் சாடினார்.

கடந்த 76 ஆண்டுகளில் ஜே.வி.பி நாட்டுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை எனவும், அவர்கள் வெறுப்பை விதைப்பதை மட்டுமே செய்துள்ளனர்.

மேலும், நாட்டின் எரிசக்தி துறையில் பாரிய ஊழல்கள் இடம்பெற்று வருவதாகவும், தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்ததன் மூலம் 7.8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வெளிப்படுத்தினார். இந்த ஊழலுக்குப் பொறுப்பான அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஜனாதிபதிக்குத் தைரியம் இல்லை எனத் தெரிவித்த அவர், அரசாங்கம் சிறு வணிகர்களைப் புறக்கணித்துவிட்டு, தமக்கு நெருக்கமான மோசடி வர்த்தகர்களுக்கு மாத்திரம் சலுகைகளை வழங்கி வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஒருபோதும் சர்வதேசத்திற்கு முன்னால் நாட்டின் கௌரவத்தை விட்டுக்கொடுத்ததில்லை எனத் தெரிவித்த சேனநாயக்க, ஜே.வி.பி-யினர் சஜித் பிரேமதாசவின் ஆங்கில அறிவையும் அவர் மக்களுக்குச் செய்யும் உதவிகளையும் கேலி செய்த போதிலும், அவர் எப்போதும் பொறுப்புடன் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைந்திருந்தால் அனுர திசாநாயக்கவுக்கு ஜனாதிபதி பதவி கிடைத்திருக்காது எனவும், நாட்டைச் சிறுமைப்படுத்தும் கருத்துக்களுக்காக ஜனாதிபதி நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும் எனவும் அவர் மேலும் வலியுறுத்தினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article