அணு ஆயுதங்களைக் கையகப்படுத்தும் எந்தவொரு நோக்கமும் கனடாவிற்கு இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் David McGuinty செவ்வாயன்று தெரிவித்தார். கனடா அணு ஆயுத வாய்ப்பைத் தவிர்த்துவிடக் கூடாது என்று முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி Wayne Eyre கூறிய ஆலோசனைக்கு பதிலளிக்கும் முகமாகவே அவர் இக்கருத்தை தெரிவித்தார்.
அணு ஆயுதப் பரவலுக்கு வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவிக்கும் சர்வதேச ஒப்பந்தங்களில் கனடா கையெழுத்திட்டுள்ளதாக கூறிய McGuinty கனடா நீண்ட காலமாக அணு ஆயுதப் பரவல் இல்லாத நாடாக இருந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.
நாங்கள் தொடர்ந்து வழக்கமான ஆயுதங்களை உருவாக்குவோம், தொடர்ந்து மறுசீரமைப்போம், முதலீடு செய்வோம் அத்துடன் கனேடிய ஆயுதப் படைகளை மீண்டும் கட்டியமைப்போம், அதைத்தான் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம் என மேலும் கூறினார்.
திங்களன்று Ottawa வில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய Eyre, கனடா அணு ஆயுதங்களைப் பெறுவதை முற்றிலுமாக நிராகரிக்கக் கூடாது என்றும், கனடா தனது சொந்த அணு ஆயுதத் தடுப்பு ஆற்றலைக் கொண்டிருக்காவிட்டால், ஒருபோதும் உண்மையான சுதந்திரத்தைப் பெற முடியாது எனவும் கருத்து வெளியிட்டிருந்தார்.
சர்வதேச உறவுகளில் அணு ஆயுதங்கள் மீண்டும் ஒரு பெரிய கவலையாக உருவெடுத்துள்ள நிலையில், அமெரிக்காவிற்கும் Russia விற்கும் இடையிலான மிக முக்கியமான அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தமான New START ஒப்பந்தம் இந்த வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ளது. இது உலகளாவிய ஆயுதப் போட்டி மீண்டும் உருவாகலாம் என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.
Sweden போலவே, கனடாவும் ஓர் அணு ஆயுதமற்ற நாடாகும். அணு ஆயுதப் பரவல் தடை தொடர்பான சர்வதேச ஒப்பந்தத்தில் (NPT) அது கையெழுத்திட்டுள்ளது. இந்த சர்வதேச உடன்படிக்கையானது, அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அவற்றை வாங்குவதையோ அல்லது தயாரிப்பதையோ தடை செய்கிறது.
பொதுவாக NPT என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம், உலகளாவிய ஆயுதக் குறைப்பு இயக்கத்தின் அடித்தளமாகச் செயல்படுகிறது. 1970-ஆம் ஆண்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது முதல் கனடா இதற்கு வலுவான ஆதரவை வழங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

