17.8 C
Scarborough

பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 2 – 0 என வென்றது மெக்சிகோ1

Must read

மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நேற்று வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடிய கூட்டு வரவேற்பு நாடுகளில் ஒன்றான மெக்சிகோ 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மெக்சிகோ சிட்டி மைதானத்தில் நடைபெற்ற கோலாகலமான தொடக்க விழாவைத் தொடர்ந்து இந்த ஆரம்பப் போட்டி 80,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

போட்டி ஆரம்பித்த சொற்ப நேரத்தில் மெக்சிகோவுக்கு கிடைத்த வாய்ப்பை தென் ஆபிரிக்கா தடுத்து நிறுத்தியது.

தொடர்ந்து  ஆட்டத்தில் சமநிலை பேணப்பட்ட நிலையில் 9அவது நிமிடத்தில் எரிக் லீரா பரிமாறிய பந்தை ஜூலியன் குவினோன்ஸ் மிக இலாவகமாக கோலினுள் புகுத்தி மெக்சிகோவை முன்னிலையில் இட்டார.

இடைவேளையின்போது மெக்சிகோ 1 – 0 என முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்குப் பின்னர் இரண்டு அணியினரும் முரட்டுத் தனமாக விளையாடினர். இதன் காரணமாக மத்தியஸ்தர் வில்டன் சம்ப்பாயோவுக்கு கடினமான முடிவுகளை எடுக்க நேரிட்டது.

போட்டியின் 49ஆவது நிமிடத்தில் தென் ஆபிரிக்க வீரர் ஸ்பேபேலோ சித்தோல் விதிகளுக்கு முரணான வகையில் மெக்சிகோ வீரர் குட்டியேரெஸை வீழ்த்தியதால் நேரடி சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.

தென் ஆபிரிக்க அணி 10 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டதை சாதகமாக்கிக் கொண்ட மெக்சிகோ 67ஆவது நிமிடத்தில் மேலும் ஒரு கோலை போட்டது.

வலப்புறத்தில் இருந்து ரொபர்ட்டோ அல்வாராடோ பரிமாறிய பந்தை ரோல் ஜிமெனெஸ் தனது தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

போட்டியின் 84ஆவது நிமிடத்தில் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு மேலும் ஒரு தென் ஆபிரிக்க வீரர் இலக்கானதால் அவ்வணி 9 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்டது.

 

தொலைக்காட்சி மத்தியஸ்தரின் (VAR) உதவியின் மூலம் மெக்சிகோ வீரர் ரொபர்ட்டோ அல்வாராடோவை தென் ஆபிரிக்க வீரர் தெம்பா ஸ்வேன் முழங்கையால் தாக்குவது உறுதிப்படுத்திப்பட்டது. இதனை அடுத்தே அவருக்கு சிவப்பு அட்டை காட்டப்பட்டது.

 

உபாதையீடு நேரத்தில் தென் ஆபிரிக்க வீரரரை குலிசோ முதாவுவை முரணான வகையில் வீழ்த்திய மெக்சிகோ வீரர் சீசர் மொன்டெஸ் சிவப்பு அட்டைக்கு இலக்கானார்.

இந்தப் போட்டியில் ஜுலியன் குவினோன்ஸ்   ஆட்டநாயகன் ஆனார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article