கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஈரானுடன் தொடர்புடைய 27 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு நாட்களில் குறித்த ஈரானிய கப்பல்களை ஈரான் துறைமுகங்களுக்கு திரும்புமாறு அமெரிக்க படைத்தரப்பு உத்தரவிட்டு, அனுப்பியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) கூறியிருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணை கடற்பகுதியில் தொடர்ந்து பதற்றம் அதிகரித்து காணப்படும் நிலையில், நீரணை பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது.
இந்த முற்றுகை அமுல்படுத்தப்பட்ட கடந்த 13ஆம் திகதியிலிருந்து தற்போது வரை ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் கப்பல்களை அமெரிக்கா திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் அமெரிக்காவினால் 27 ஈரானிய கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
அண்மையில் ஈரான் கொடியுடன் சென்றுகொண்டிருந்த Touska என்ற கப்பலை, ஓமன் வளைகுடா கடற்பரப்பில் வைத்துத் தாக்கி, அதனை செயலிழக்கச் செய்து, பின், அந்தக் கப்பலை அமெரிக்க இராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.

