இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளின் ஊதியத்தை, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு உரித்தான சம்பளக் கட்டமைப்புக்கு அமைவாக அதிகரிப்பதற்கு பாராளுமன்றக் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர், இரு உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர் நாயகம் ஆகியோரின் ஊதியங்கள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவருக்கு உரித்தான ஊதியத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட வேண்டுமென அரசாங்க நிதி பற்றிய குழு தெரிவித்துள்ளது.
கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையிலான இந்தக்குழு, நிர்வாகக் குறைபாடுகள் காரணமாக, வரவு, செலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை ஆணைக்குழுவினால் பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதாக அவதானித்துள்ளது.
தனது வரவு, செலவுத் திட்ட மதிப்பீடுகளைச் சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சு கோரிய போதிலும், 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனது வருடாந்த வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை நேரடியாக சபாநாயகரிடமே சமர்ப்பிக்க வேண்டியிருந்தது.
அத்துடன், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு 971 ஊழியர்களுக்கான பதவிநிலைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள போதிலும், கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி 427 பதவிநிலைகள் மட்டுமே நிரப்பப்பட்டு, 544 வெற்றிடங்கள் நிலவுவதும் இதன்போது தெரியவந்துள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொருந்தும் சட்டரீதியான கால வரம்பைக் கருத்தில் கொண்டு, பழைய வழக்குகளை விரைவாக முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைச் செயற்பாட்டை விரைவுபடுத்துவதற்காக முதற்கட்ட விசாரணைகளை ஒரு மாதத்திற்குள் முடிக்க வேண்டியுள்ளதாகவும் அரசாங்க நிதி பற்றிய குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் சாட்சிகள் தொடர்பான செலவினங்களை ஈடுசெய்வதற்காக, ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 26 ஆவது பிரிவின் கீழ் ஆணைக்குழுவிற்கென தனி நிதி நிறுவப்பட்ட போதிலும், கூடுதல் நிதித் தேவைகள் திரட்டப்பட்ட நிதியத்தின் ஒதுக்கீடுகள் மூலமே பூர்த்தி செய்யப்பட்டன.
அத்துடன், நடப்பாண்டில் கைப்பற்றப்படும் சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருமானம் வாயிலாகக் கூடுதல் நிதியைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
