நாட்டில் மக்கள் அவசர கால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் இயல்பு வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
அவசரகால சட்டத்துக்கமைய சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, நீர் விநியோகம், வங்கி கட்டமைப்பு உட்பட 15 சேவைகள் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் ஆணையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் எஸ்.எஸ்.குமநாயக்கவினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (29) புதன்கிழமை முதல் அமுலுக்குவரும் வகையில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
1959 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுக் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்கச் சட்டத்தினாலும், 1988ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தப்பட்டவாறான(40 ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களுக்கமைய, அவசரகால சட்டம் மேலும் ஒரு மாத காலத்துக்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தித்வா புயல் தாக்கம் மற்றும் அதனால் ஏற்பட்ட அனர்த்த நிலையில் இருந்து நாட்டு மக்களை பாதுகாக்கவும், அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கும் பொருட்டு 2025.11.29 ஆம் திகதியன்று ஜனாதிபதியால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
