9.5 C
Scarborough

சமூக ஊடகங்களில் சிறுவர்களைப் பாதுகாக்க புதிய சட்டங்கள் – அமைச்சர் சரோஜா சாவித்திரி!

Must read

சமூக ஊடகங்களில் பிரசித்தி அடைவதற்கும் பணம் ஈட்டுவதற்கும் சிறுவர்களை பாதுகாப்பற்ற அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதைத் தடுப்பதற்காகப் புதிய சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று செவ்வாய்க்கிழமை (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக ஊடகங்களில் பிரபலமடையும் நோக்கோ அல்லது பணம் ஈட்டும் நோக்கமோ கொண்டு, குழந்தைகளை ஆபத்தான இடங்களுக்கு அழைத்துச் செல்வது, ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்தத் தூண்டுவது மற்றும் பெரியவர்களுக்குரிய கருப்பொருள்களில் ஈடுபடுத்துவது போன்ற செயல்கள் தற்காலத்தில் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது. இத்தகைய செயல்களில் ஈடுபட்டு பிள்ளைகளின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் பெற்றோர் தங்களைப் பெற்றோர் என அழைத்துக்கொள்ளவே தகுதியற்றவர்கள் ஆவர்.

குழந்தைகள் வளர்ந்து, சுயமாக முடிவெடுக்கும் அளவுக்கு முதிர்ச்சியடையும் முன்பே அவர்கள் பிரபலமடைவதைத் தீர்மானிக்கப் பெற்றோருக்கு எந்த உரிமையும் கிடையாது. பொறுப்பற்ற முறையில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளைப் பாதிப்புக்குள்ளாக்கும் பெற்றோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு எதிர்காலத்தில் அக்குழந்தைகள் பாதுகாப்புப் பராமரிப்பில் வைக்க நேரிடும்.

குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் நலன் சார்ந்த ஆரோக்கியமான ஊடகக் கலாசாரம் ஒன்றை உருவாக்கும் வகையில், மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சகமும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் இணைந்து நிபுணர் குழு ஒன்றின் மூலம் புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் தயாரித்து வருகின்றன. தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மிக விரைவில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.

உலகளாவிய ரீதியில் ‘கிட்ஃப்ளூயன்சிங்’ (‘Kidfluencing) எனப்படும் சிறுவர்களை வணிக மற்றும் பிரபல நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போக்கைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவின் கலிபோர்னியா போன்ற நாடுகள் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளன. குறிப்பாக, சிறுவர்கள் மூலம் ஈட்டப்படும் வருமானத்தை பாதுகாப்பான காப்புறுதிக் கணக்குகளில் சேமிப்பதும், அவர்களின் பயன்பாட்டுக் காலத்தைக் கட்டுப்படுத்துவதும் அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய சமூக ஊடக நிறுவனங்களும் சிறுவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கக் கடுமையான கொள்கைகளைக் கொண்டுவரும் நிலையில், இலங்கையும் இத்தகைய புதிய வழிகாட்டுதல்கள் மூலம் வலுவான பாதுகாப்புக் கட்டமைப்பை உருவாக்கத் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article