இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் மற்றும் கடந்த கால படுகொலைகள் குறித்து விசாணைகளை மேற்கொள்ளும் போது விசாரணையாளர்களை எதிர்க்கட்சியினர் எதிரிகளாக பார்க்கிறார்கள். ஊழல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தவே மக்கள் எனக்கு ஆணை வழங்கியுள்ளார்கள். சட்ட நடவடிக்கை எடுப்பது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் இந்த ஆண்டுக்குள் இரத்துச் செய்யப்படும். ஒழுங்கமைக்கப்பட்ட பாதாளக் குழுக்களுக்கு எதிராக விசேட சட்டம் வெகுவிரைவில் உருவாக்கப்படும். கீழ் நிலை நீதிமன்றங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு நியமனங்களை வழங்காமல் உயர், மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் வெற்றிடங்களை நிரப்பினால் கீழ் நிலை நீதிமன்றங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படும். நீதியரசர்களுக்கான நியமனங்கள் குறித்து பிரதம நீதியரசர் விசேட கவனம் செலுத்தியுள்ளார். நீதித்துறைக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. நீதியரசர்களுக்கு விசேட சலுகை வழங்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுவது நீதித்துறையை அவமதிக்கும் ஒரு செயற்பாடாகும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
