மும்பை வான்கடே விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற மும்பை இண்டியன்ஸ் அணிக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் அணிகள் நிலையில் 9 புள்ளிகளுடன் முதலாம் இடத்திற்கு பஞ்சாப் கிங்ஸ் முன்னேறியது.
மும்பை இண்டியன்ஸ் சார்பாக குவின்டன் டி கொக் அபார சதம் குவித்த போதிலும் அதனை ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோர் குவித்த அரைச் சதங்கள் விணடிக்கச் செய்தன.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 195 ஓட்டங்களைப் பெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் 12 ஓட்டங்கள் என்ற ஒரே மொத்த எண்ணிக்கையில் 2 விக்கெட்களை இழந்ததால் மும்பை இண்டியன்ஸ் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
ஆனால், குவின்டன் டி கொக் குவித்த அபார சதமும் நாமன் திர் பெற்ற அரைச் சதமும் மும்பை இண்டியன்ஸை சிறந்த நிலையில் இட்டது.
அவர்கள் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 122 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
குவின்டன் டி கொக் 60 பந்துகளில் 8 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 112 ஓட்டங்களைக் குவித்தார்.
நாமன் திர் 31 பந்துகளில் 50 ஓட்டங்களைப் பெற்றார்.
அவர்கள் இருவரை விட அணித் தலைவர் ஹார்திக் பாண்டியா (12) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
197 ஓட்டங்கள் என்ற சற்று கடினமான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 16.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 198 ஓட்டங்களைப் பெற்று மிக இலகுவாக வெற்றியீட்டியது.
ப்ரியான்ஷ் ஆரியா (15), கூப்பர் கொன்னலி (17) ஆகிய இருவரும் குறைந்த எண்ணிக்கைகளுக்கு ஆட்டம் இழந்தனர். (45 – 2 விக்.)
எனினும் ப்ரப்சிம்ரன் சிங், அணித் தலைவர் ஷ்ரேயஸ் ஐயர் ஆகிய இருவரும் 67 பந்துகளில் 139 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர்.
ஷ்ரேயஸ் ஐயர் 35 பந்துகளில் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து ப்ரப்சிம்ரன் சிங், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் ஆகிய இருவரும் வெற்றிக்கு தேவைப்பட்ட மிகுதி ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
ப்ரப்சிம்ரன் 39 பந்துகளில் 11 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 80 ஓட்டங்களுடனும் மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
பந்துவீச்சில் ஏ.எம். கஸன்ஃபார் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

