தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு பண்டிகை கொண்டாட்டங்களின் போது பட்டாசுகள் மற்றும் வாணவேடிக்கைகளால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பூனைகளும் நாய்களும் செவித்திறன் பாதிப்பு மற்றும் திசை அறியாமைக்கு ஆளாகியுள்ளதாக விலங்கு இனத்தொகை மனிதாபிமான முகாமைத்துவத்துக்கான கால்நடை வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசகர் வைத்தியர் சமித் நாநாயக்கார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஆங்கில ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியிலேயே வைத்தியர் சமித் நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.
அந்த செவ்வியில் அவர் மேலும் பல முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
மனிதர்களை விட விலங்குகளின் கேள்வித் திறன் மிகவும் அதிகமாகும். நாய்கள் சுமார் 60,000 Hz வரையிலும், பூனைகள் 85,000 Hz வரையிலும் ஒலிகளை உணரக்கூடியவை.
பொதுவாக பட்டாசுகள் 120 முதல் 175 டெசிபல் வரை ஒலி எழுப்புகின்றன. ஆனால் 140 டெசிபல் அளவிலான ஒலியே விலங்குகளுக்கு கடும் வலி மற்றும் நிரந்தர செவித்திறன் இழப்பை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
திடீர் வெடிச்சத்தத்தால் பீதியடையும் செல்லப்பிராணிகள் வீடுகளை விட்டு ஓடுவதால், பல விலங்குகள் வழிதெரியாமல் போகின்றன. இதனால் சிலவை வீதி விபத்துகளில் சிக்கி உயிரிழக்கும் அபாயமும் உள்ளது.
மேலும், அதிக சத்தத்தால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக விலங்குகள் உணவு உட்கொள்ளாமல் இருப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.
வீட்டு விலங்குகள் மட்டுமின்றி, பறவைகளும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. அதிர்வு அலைகளால் கூடுகளில் உள்ள முட்டைகள் சேதமடைவதுடன், செவித்திறன் பாதிக்கப்பட்ட பறவைகள் உணவு தேடுவதிலும் சிரமம் அனுபவிக்கின்றன.
“கொண்டாட்டங்கள் பிற உயிரினங்களின் துயரத்தில் அமையக்கூடாது. ஒவ்வொரு உயிருக்கும் பாதுகாப்பாக வாழும் உரிமை உண்டு. எனவே, எதிர்காலத்தில் பட்டாசுகளுக்குப் பதிலாக சூழல் நட்பு முறைகளைப் பயன்படுத்த வேண்டும்” என வைத்தியர் நாநாயக்கார வலியுறுத்தியுள்ளார்.

