16.8 C
Scarborough

அனோஜனின் விடுதலை முயற்சியைக் குழப்பும் நோக்குடன் சில தீயசக்திகள் செயலாற்றுகின்றன – பொதுவெளியில் தவறான கருத்துக்களை பகிரவேண்டாம் என சுமந்திரன் வேண்டுகோள்!

Must read

சிவராசா அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு இன, மதபேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளை வேண்டுமென்றே குழப்பும் வகையிலும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் காணமுடிகிறது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானதும், அனோஜனின் நலனுக்குப் புறம்பானதுமாகும். அனோஜனை மன்னிக்குமாறு கோருவதைத் தவிர இதுகுறித்து வேறு கருத்துக்கள் எதனையும் பொதுவெளியில் பகிர்வது உசிதமல்ல என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மதநிந்தனைக் குற்றச்சாட்டில் கடந்த மாதத் தொடக்கத்தில் சவூதி அரேபிய நீதிமன்றத்தினால் 5 வருடகால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட்ட இலங்கையரான சிவராசா அனோஜனின் மேன்முறையீட்டை அடுத்து, தற்போது அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுவரும் கருத்துக்கள் குறித்து சுமந்திரன் மேலும் கூறியிருப்பதாவது:

சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, மரண தண்டனையை இரத்துச்செய்வதற்கான பல முயற்சிகளை தற்போது  இன, மதபேதமின்றி சகல சமூகங்களைச் சேர்ந்த தலைவர்களும் முன்னெடுத்துவருகிறார்கள் என்பது அனைவருக்குத் தெரிந்த விடயமாகும். இதில் இஸ்லாமிய தலைவர்களின் பங்களிப்பு மிகமுக்கியமானதாகும். முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைவர்கள் தாமாகவே முன்வந்து இந்த அளப்பெரும் பணியைச் செய்கிறார்கள்.

அதேவேளை இந்த ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு என்றும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் காணமுடிகிறது. வேண்டுமென்று இஸ்லாமிய சகோதரர்களைக் கோபமூட்டும் நோக்கத்தோடு பொதுவெளியில் கருத்துக்கள் பகிரப்படுகின்றன. இது மிகவும் துரதிஷ்டவசமானதும், அனோஜனின் நலனுக்குப் புறம்பானதுமாகும்.

இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தைக் கையாள்வதற்குப் போதிய அவகாசம் அளிப்பதாக இருந்தால், அனோஜனை மன்னிக்குமாறு கோருவதைத் தவிர இதுகுறித்து வேறு கருத்துக்கள் எதனையும் பொதுவெளியில் பகிர்வது உசிதமல்ல. அவ்வாறு செய்வது மிக ஆபத்தான செயலுமாகும்.

ஆகையினால் ஒரு உயிரைக் காப்பாற்றும் முயற்சிகள் வெற்றிபெறும் வகையில் எமது நாவினைக் காப்போம். அவரை மன்னிக்குமாறு சவூதி அரேபியாவிடம் கோருவோம். இறைபக்தி உடையவர்கள் அதற்காக இறைவனிடத்தில் மன்றாடுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article