தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் புதன்கிழமை (24) இரவு ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதோடு, 971க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் தற்காலிக ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வியாழக்கிழமை (25) அறிவித்துள்ளார்.
முன்னதாக பலி எண்ணிக்கை 32 ஆகக் காணப்பட்ட நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, முதல் நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.2 ஆகவும், அடுத்த ஒரு நிமிடத்திற்குள் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.5 ஆகவும் பதிவாகியுள்ளது.
தலைநகர் கராகாஸிலிருந்து மேற்கே சுமார் 170 கிலோமீற்றர் தொலைவில் உள்ள மொரோன் என்ற கரையோரப் பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
