11.6 C
Scarborough

துருவ நட்சத்திரம் – ஒரு வழியாகத் திகதி குறிச்சாச்சு!

Must read

விக்ரம் நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நீண்ட கால நிதிச் சிக்கல்களுக்குப் பிறகு, வரும் ஜூன் 15ஆம் திகதிக்குள் திரைக்கு வரும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விக்ரம், ரித்து வர்மா, சிம்ரன், டிடி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோசன் பிக்சர்ஸ் மதன் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் பங்குதாரர்களாக உள்ள ‘கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் தயாரித்தது.

முன்னதாக, எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரித்த ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் தொடர்பான நிதிப் பிரச்சினை காரணமாக, துருவ நட்சத்திரம் படத்தில் மதனுக்கு இருந்த 50 சதவீத உரிமையை அவர் புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகிய இருவருக்கு வழங்கியிருந்தார்.

இச்சூழலில் கடந்த 2023இல் படத்தை வெளியிடக் கவுதம் மேனன் முயற்சித்தபோது, தங்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் படத்தை வெளியிடக் கூடாது எனப் புண்ணியமூர்த்தியும், பிரேம்குமாரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து படத்திற்குத் தடை உத்தரவு பெற்றனர்.

அப்போதிலிருந்து பலமுறை முயற்சித்தும் படம் வெளிவராமல் முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டிற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி வரும் ஜூன் 15ஆம் திகதிக்குள் இப்படத்தை வெளியிட வேண்டும் எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், படத்தின் வருமானம் மற்றும் செலவுகளைக் கண்காணிக்க ஒரு வழக்கறிஞர் மேற்பார்வையாளராக நியமிக்கப்படுவார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், படத்தின் வருவாய் முறையாகப் பகிரப்படுவதை உறுதி செய்ய ஒரு பிரத்யேக வங்கி கணக்கு தொடங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள நீதிமன்றம், படத்தின் வெளியீட்டிற்கு எவ்விதமான முட்டுக்கட்டையும் போடக்கூடாது என மனுதாரர்களுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒருவேளை குறிப்பிட்ட ஜூன் 15ஆம் திகதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால், அதற்கான முறையான காரணங்களுடன் கால நீட்டிப்பு கோரி மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தத் தீர்ப்பின் மூலம் பல ஆண்டுகளாகக் காத்திருந்த விக்ரம் இரசிகர்களுக்குப் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article