8.2 C
Scarborough

கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!

Must read

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாய்லாந்திற்குச் சென்று சனிக்கிழமை (25)  நாடு திரும்பிய இவர்களிடமிருந்து 112 கிலோகிராம் “குஷ்” மற்றும் “ஹஷிஸ்” போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

தற்போது பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தேரர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (28)  சட்ட வைத்திய அதிகாரியிடம்  ஆஜர்ப்படுத்திய போதே, அவர்களில் 19 பேர் கஞ்சா போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கைதானவர்களில் ஜம்புரலிய பகுதியைச் சேர்ந்த மூன்று தேரர்கள் ஏற்கனவே தாய்லாந்து சென்று வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் கொண்டு வந்த போதைப்பொருட்கள் அத்துருகிரிய பகுதியிலுள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த வீட்டின் உரிமையாளரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் மே மாதம் மேலும் 40 தேரர்களை தாய்லாந்திற்கு அழைத்துச் செல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தமை அம்பலமாகியுள்ளது.

இந்த வலையமைப்பை இலங்கையிலிருந்து இயக்கிய ‘அமிதாந்த’ எனும் தேரர், கம்பஹா விகாரை ஒன்றில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை (25) அன்று விமான நிலையத்திற்குப் போதைப்பொருளைப் பெற்றுக்கொள்ள வந்த இவர், ஏனையவர்கள் பிடிபட்டதும் தப்பியோடியுள்ளார். கைது செய்யப்படும்போது அவரும் போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் இருந்துள்ளார்.

இந்த முழு மோசடியின் பின்னணியில் வர்த்தகர்கள் போல் வேடமிட்டுள்ள இருவர் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் ‘ஹாஜி’ எனும் பெயரில் அழைக்கப்படுபவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த பாரிய கடத்தல் குறித்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் நேரடி மேற்பார்வையில், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேனவின் வழிநடத்தலில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article