13.1 C
Scarborough

புத்தாண்டு விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பம்

Must read

புத்தாண்டு காலத்திற்காக கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக நேற்று (08) முதல் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் விசேட போக்குவரத்துத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை இம்முறை 1,500 மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.  அத்துடன், அவசர தேவைக்காக மேலும் 50 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் சுமார் 800 மேலதிக தனியார் பேருந்துகள் நாளாந்தம் இயக்கப்படவுள்ளன. இவை பிரதானமாக கடுவலை, கடவத்தை, மாகும்புர மற்றும் பெஸ்டியன் மாவத்தை நிலையங்களிலிருந்து புறப்படும்.

ஒரு வழிக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு சாதாரண கட்டணத்தைப் போல 1.5 மடங்கு அறவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது (இது அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளுக்குப் பொருந்தாது).

போக்குவரத்துச் சேவையைத் தடையின்றி வழங்க அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்டிருந்த வடக்கு தொடருந்து பாதை மீளமைக்கப்பட்டு, இன்று (09) முதல் கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை தொடருந்து சேவைகள் நீடிக்கப்பட்டுள்ளன.

காலி, மாத்தறை, புத்தளம் மற்றும் அவிசாவளை ஆகிய பகுதிகளுக்கும் விசேட தொடருந்து சேவைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீண்டதூர தொடருந்துகள் நிறுத்தும் உணவகங்களில் அதிக விலை அறவிடப்படுவதைத் தடுக்கவும், சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:

பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் உணவகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதுடன், விலைக்கட்டுப்பாடும் விதிக்கப்படும்.

இதுவரை தரம் குறைந்த 57 உணவகங்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றை தரப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பிரதான பேருந்து நிலையங்களில் சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் முதலுதவி வசதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

முறைப்பாடுகளைத் தெரிவிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 எனும் அவசர இலக்கத்தையோ அல்லது 0712595555 எனும் வட்ஸ்அப் இலக்கத்தையோ தொடர்பு கொள்ளலாம்.

இம்முறை பண்டிகைக் காலத்தில் சுமார் 15 இலட்சம் பயணிகள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article