எதிர்வரும் ஒக்டோபர் மாதம் றொரண்டோ மாநகர சபை தேர்தலில், வார்டு 25, Scarborough Rouge Park தொகுதிக்கான கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவதாக தர்ஷன் காசிநாதன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஸ்கார்பரோவில் பிறந்து வளர்ந்த தர்ஷன் காசிநாதன், தான் வளர்ந்த பகுதியின் கள நிலவரங்களையும் மக்களின் அன்றாட தேவைகளையும் நன்கு உணர்ந்த ஒருவராகத் தேர்தல் களத்தில் முன்னிற்கிறார்.
றொரண்டோ பல்கலைக்கழகத்தின் ரோட்மேன் மேலாண்மைப் பள்ளியில் (Rotman School of Management) முதுகலை வணிக மேலாண்மை (MBA) பட்டம் பெற்ற இவர், பாரம்பரிய அரசியல் பின்னணியில் இருந்து வராமல், வலுவான பெருநிறுவன மேலாண்மை அனுபவத்துடன் அரசியலுக்குள் பயணித்துள்ளார்.
குறிப்பாக, ‘லபாட் ப்ரூவரீஸ் ஆஃப் கனடா’ (Labatt Breweries of Canada) போன்ற முன்னணி நிறுவனங்களில் நிதித் திட்டமிடல் (FP&A), விற்பனை, தரவு பகுப்பாய்வு மற்றும் திட்ட மேலாண்மை ஆகிய முக்கிய துறைகளில் 12 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய நீண்டகால தலைமைத்துவ அனுபவத்தை இவர் கொண்டுள்ளார்.
தேர்தல் வாக்குறுதிகளும் கொள்கைகளும்:
றொரண்டோ மாநகரத்தின் தேர்தல் வழிகாட்டித் தளங்களில் அவர் வெளியிட்டுள்ள தேர்தல் கொள்கை அறிக்கையின்படி, பின்வரும் மூன்று முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமையளித்துள்ளதாக தர்ஷன் அறிவித்துள்ளார்.
உள்ளூர் உள்கட்டமைப்பு மேம்பாடு:
ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் பகுதிக்கான வீதிகள் புனரமைப்பு, பூங்காக்கள் பராமரிப்பு மற்றும் சீரான கழிவு மேலாண்மை உள்ளிட்ட அத்தியாவசிய பொதுச் சேவைகளின் தரத்தை உயர்த்த முன்னுரிமை அளித்தல்.
நம்பகமான பொதுப் போக்குவரத்து:
ஸ்கார்பரோ பகுதி மக்கள் நீண்டகாலமாக எதிர்கொள்ளும் போக்குவரத்து நெரிசல் மற்றும் தாமதங்களுக்குத் தீர்வு காணும் வகையில், நம்பகமானதும் மேம்படுத்தப்பட்டதுமான போக்குவரத்து கட்டமைப்பை வலுப்படுத்துதல்.
வெளிப்படைத்தன்மையும் நிதிப் பொறுப்புக்கூறலும்:
தனது 12 ஆண்டுகால வணிக மேலாண்மை அனுபவத்தைக் கொண்டு, பொதுமக்களின் வரிப்பணம் உரிய முறையில் திட்டமிட்டுச் செலவிடப்படுவதை உறுதிசெய்வதுடன், மாநகர நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையையும் செயல்திறனையும் (Operational efficiency) ஏற்படுத்துதல்.
மாநகர நிர்வாகத்தில் புதிய திட்டமிடல் அணுகுமுறையையும், வெளிப்படையான பொறுப்புக்கூறலையும் எதிர்பார்க்கும் வாக்காளர்கள் மத்தியில் இவரது வேட்புமனு கவனத்தைப் பெற்றுள்ளது.


