உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்துள்ளதன் தாக்கமாக, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கான மின்சார உற்பத்திச் செலவு மதிப்பீட்டை நஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர் (NSO) நிறுவனம் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, முன்மொழியப்பட்ட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்து பொதுக் கலந்தாய்வை நடத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தீர்மானித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை (27) NSO நிறுவனம் சமர்ப்பித்த திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு, மின்சாரக் கட்டண மாற்றம் தொடர்பான ஆலோசனைப் பத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்புகள் தங்களது கருத்துக்களையும் பரிந்துரைகளையும் முன்வைக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைப் பத்திரத்தில், மே 10ஆம் திகதி முதல் மின்சார நுகர்வோருக்கு ரூ.15 பில்லியன் அரச மானியம் வழங்கல், வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட 95% நுகர்வோருக்கான கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்ற பரிந்துரை, பொதுத் தேவைகள், அரச நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களில் மாதம் 180 அலகுகளுக்கு குறைவாக பயன்படுத்தும் பிரிவுகளுக்கு கட்டண உயர்வு தவிர்க்கப்பட வேண்டும், தொழில்துறைப் பிரிவின் முதல் துணைப் பிரிவிற்கான கட்டண உயர்வை தவிர்க்கும் முன்மொழிவு, நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகளை கட்டணத்தில் சேர்க்காமல் இருக்க நடவடிக்கைகள் போன்ற முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
