19 C
Scarborough

சொந்த மண்ணில் ஹெட்-ட்ரிக் அடித்த 8ஆவது உலகக் கிண்ண வீரர் ஜோனதன் டேவிட்-கனடா!

Must read

வான்கூவர், BC ப்ளேஸ் வான்கூவர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பி குழு பீபா உலகக் கிண்ணப் போட்டியில் ஜோனதன் டேவிட் ஹெட்-ட்ரிக் பதிவு செய்ததன் பலனாக கனடா கோல் மழை பொழிந்து 6 – 0 என 9 வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட கத்தாரை துவம்சம் செய்தது.

அதேவேளை, லொஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டரங்கில் இதே குழுவுக்கான மற்றொரு போட்டியில் பொஸ்னியா & ஹேர்சிகோவினா அணியை சுவிட்சர்லாந்து 4 – 1 என இலகுவாக வெற்றிகொண்டது.

செச்சியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் அட்லான்டா விளையாட்டரங்கில் நடைபெற்ற ஏ குழு போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

ஒன்பது வீரர்களாக மட்டுப்படுத்தப்பட்ட கத்தார் அணிக்கு எதிரான போட்டியில் ஜோனதன் டேவிட் ஹெட்-ட்ரிக் கோல்களைப் புகுத்தி வரலாறு படைத்தார்.

உலகக் கிண்ண வரலாற்றில் கடந்த 40 வருடங்களில் சொந்த மண்ணில் வீரர் ஒருவர் ஹெட்-ட்ரிக்கை பதிவுசெய்தது இதுவே முதல் தடவையாகும்.

அத்துடன் உலகக் கிண்ண வரலாற்றில் சொந்த மண்ணில் ஹெட்-ட்ரிக் கோல்களைப் புகுத்தியவர்கள் வரிசையில் ஜோனதன் டேவிட்ட 8ஆவது வீரரானார்.

கில்லேர்மோ ஸ்டெபிள் (ஆர்ஜன்டீனா எதிர் மெக்சிகோ 1930), பெட்ரோ சீ (உருகுவே எதிர் யூகோஸ்லாவியா 1930), ஏஞ்சலோ ஷவிவியோ (இத்தாலி எதிர் ஐக்கிய அமெரிக்கா 1934), எட்மண்ட் கொனென் (ஜேர்மனி எதிர் பெல்ஜியம் 1934), லியோனிடாஸ் (பிரேஸில் எதிர் போலந்து 1938), பேலே (பிரேஸில் எதிர் பிரான்ஸ் 1958), ஜெவ் ஹேர்ஸ் (இங்கிலாந்து எதிர் மேற்கு ஜேர்மனி 1966) ஆகியோரே இதற்கு முன்னர் சொந்த மண்ணில் ஹெட்-ட்ரிக் முறையில் கோல் அடித்த வீரர்களாவர்.

மேலும் இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் லியோனல் மெஸ்ஸிக்கைத் தொடர்ந்து ஹெட்-ட்ரிக்கை பதிவுசெய்த இரண்டாவது வீரர் ஜோனதன் டேவிட் ஆவார்.

போட்டியின் 29, 45+2, 90+2ஆவது நிமிடங்களில் ஜோனதன் டேவிட் கோல்களைப் போட்டார்.

சைல் லரின் (16 நி.),  நதன் சாலிபா (65 நி.) ஆகியோரும் கனடா சார்பாக தலா ஒரு கோலை போட்டனர்.

இப் போட்டியின் 33ஆவது நிமிடத்தில் ஹொமாம் அஹமத், 51ஆவது நிமிடத்தில் அசிம் மாதிபோ ஆகிய இரண்டு கத்தார் வீரர்கள் ஆபத்தான முறையில் விதிகளை மீறினார்கள் என்ற காரணத்தினால் மத்தியஸ்தரின் சிவப்பு அட்டைக்கு இலக்காகினர்.

போதாக்குறைக்கு கத்தார் வீரர் மொஹம்மத் மனாய் 75ஆவது நிமிடத்தில் தவறுதலாக தனது சொந்த கோலின் பந்தை புகுத்தி கனடாவுக்கு இனாம் கோல் ஒன்றைக் கொடுத்தார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article