கனடா – வின்னிபெக் (Winnipeg) காவல் துறை தலைமையகத்தில் ஏற்பட்ட பெருமளவான நீர்ப்பெருக்கு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் பேரில் ஆணொருவரும் பெண்னொருவருமாக இரு சந்தேக நபர்களிடத்தில் சேதப்படுத்தல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே இச்சம்பவத்தால் ஏற்பட்ட சேதங்களைச் சீரமைக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன
நகர மையத்தில் அமைந்துள்ள 266 கிரேஹாம் அவென்யூ அலுவலகக் கோபுரப் பகுதியில் சனிக்கிழமை மாலை நீர் சொட்டத் தொடங்கியது. குறிப்பாக அன்றைய தினம் 6 மணியளவில் இருவர் கோபுரக் கட்டிடத்தின் மேல்தள படிக்கட்டுப் பகுதிகளில் அமைந்திருந்த அவசர நீர் வழங்கல் வால்வுகளைத் திறந்ததன் விளைவாக பெருமளவான நீர்ப்பெருக்கு ஏற்பட்டதாக காவல் துறை தெரிவிக்கிறது.
கட்டிடத்தைச் சுற்றிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இச்சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை காவல் துறை அடையாளம் கண்டதாக தெரிவித்துள்ளது.
இரவு 11 மணிக்கு பின்னர் கிரேஹாம் அவென்யூவின் 200-ஆம் தொகுதிப் பகுதியில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
51 வயதுடைய ஆணொருவரும் 36 வயதுடைய பெண்னொருவரும் $5,000 க்கும் அதிகமான சேதத்தை ஏற்படுத்தியதால் அவர்களுக்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

