9.3 C
Scarborough

போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது – சந்தேகநபர்களை இயக்கிய அமிதானந்த தேரருக்கு 7 நாள் தடுப்புக் காவல்!

Must read

தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களோடு இலங்கைக்குள் நுழைந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த பிக்குகளை இயக்கியதாகக் கூறப்படும் கடவத்தை, ரம்முத்துகல ஸ்ரீலங்காராம விகாரையைச் சேர்ந்த அங்குணுகொல அமிதானந்த தேரரை ஏழு நாட்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (27) அனுமதி அளித்தது.

குறித்த அங்குணுகொல அமிதானந்த தேரரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் நேற்று (27)  நீர்கொழும்பு நீதவான் சுபாசினி அபேசேகர முன்னிலையில் ஆஜர் செய்தனர். இதன்போதே அவரை ஏழு நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிவான் அனுமதி அளித்தார். தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களைக் கடத்தி வந்த பிக்குகள் கைது செய்யப்பட்டபோது, அங்குணுகொல அமிதானந்த தேரர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளைக் கையேற்கத் தயாரான நிலையில் இருந்ததாகவும், குறித்த தேரர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததாகவும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இதன்போது போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் விசேட குழு ஒன்றினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அங்குணுகொல அமிதானந்த தேரரை மிரிஸ்வத்த பகுதியில் வைத்து கைது செய்ததாக அவர்கள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட குறித்த தேரரை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும், இதன்போது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அங்குணுகொல அமிதானந்த தேரர் தலைமையில் இயக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுமம் ஒன்றினை கண்டறிந்துள்ளதாகவும், அது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் குறிப்பிட்டனர். இந்த நிலையிலேயே இது தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனிடையே விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட 22 பிக்குகளையும் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வருவதோடு, நேற்றைய தினம் குறித்த சந்தேகைநபர்கள் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்தப்பட்தை தொடரந்து விசாரணை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

மேலும் அங்குணுகொல அமிதானந்த தேரர் இதற்கு முன்னரும் இவ்வாறானதொரு 12 பேர் கொண்ட குழுவினை தாய்லாந்துக்கு அனுப்பி இருப்பதும், இவர்களைத் தொடர்ந்து மற்றொரு குழுவை அனுப்புவதற்குத் தயார் நிலையில் இருந்துள்ளமை தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் அனுப்பப்பட்ட சந்தர்ப்பத்தின் போதும் போதைப்பொருள் ஏதும் கடத்தப்பட்டதா என்பது தொடர்பாகவும், இதன் பின்னணி தொடர்பாக முழுமையான விடயங்களை வெளிப்படுத்தவும் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article