கியூபெக் லிபரல் கட்சியின் தலைமைப் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. Quebec வர்த்தக சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான Charles Milliard, கட்சியின் மத்திய குழுவில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்றுள்ளார்.
Quebec இன் Beauce பகுதியைச் சேர்ந்த விவசாயியான Mario Roy, இப்பதவிக்கு போட்டியிட ஆர்வம் காட்டியுள்ள ஒரேயொரு மற்றைய நபர் ஆவார். இருப்பினும், 2025 தலைமைத்துவப் போட்டியின் போது அவருக்கு ஏற்பட்ட கடன்கள் காரணமாக கட்சி அவரைப் போட்டியிலிருந்து நீக்க வாய்ப்புள்ளது.
46 வயதான Milliard, கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் முன்னாள் மத்திய அமைச்சரான Pablo Rodriguez இற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைப் பிடித்தார். வாக்குக்கு பணம் கொடுத்தமை மற்றும் நன்கொடைகளைத் திருப்பிச் செலுத்தியது தொடர்பான குற்றச்சாட்டுகளால் எழுந்த நெருக்கடிக்கு மத்தியில், Rodriguez கடந்த December மாதம் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
பெருமளவிலான பிரெஞ்சு மொழி பேசும் மக்களிடையே செல்வாக்கை இழந்துள்ள தங்களது கட்சியை மீண்டும் புத்துயிர் பெறச் செய்வதாக Milliard உறுதியளித்துள்ளார்.
இந்தத் தலைமைத்துவப் போட்டி Québec அரசியலில் ஒரு முக்கியமான தருணத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் முதல்வர் François Legault தான் பதவிலகப் போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஆளும் கட்சியான Coalition Avenir Québec (CAQ) கட்சியும் தற்போது ஒரு புதிய தலைவரைத் தேடி வருகிறது. இந்நிலையில், Québec மக்கள் வரும் October மாதம் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.

