தேசிய பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, கனேடிய ஆயுதப்படையைச் சேர்ந்த பீரங்கிப்படை வீரர் ஒருவர் வியாழக்கிழமையன்று Latvia வில் காலமானார்.
Operation REASSURANCE திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்பட்ட Sebastian Halmagean, Ontario வின் Hamilton நகரைச் சேர்ந்தவர். அந்த அறிக்கையின்படி, Halmagean ஆயுதப்படையில் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் பணியாற்றியுள்ளார், இருப்பினும் இதுவே அவரது முதல் வெளிநாட்டுப் பணியாகும்.
இந்தச் சம்பவம் பணியில் இருக்கும் எமது ஏனைய உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்திருப்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை, என்று கனேடியப் பாதுகாப்புப் படை தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
Canadian Joint Operations Command இன் பொது விவகாரப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உயிரிழந்த நேரத்தில் பணியில் இருந்தார் என்பதை உறுதிப்படுத்தியது.
எனினும், Halmagean எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்த விவரங்களை பாதுகாப்புத் துறை வழங்கவில்லை. இருந்தபோதும், கனேடியப் படைகளின் இராணுவக் காவல்துறையின் ஆதரவுடன், Latvia இராணுவக் காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
”Halmagean ஒரு நம்பிக்கைக்குரிய வாழ்க்கையின் தொடக்கத்தில் இருந்தார், மேலும் அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்கான கடப்பாட்டை நாங்கள் எப்போதும் நினைவில் கொள்வோம்,” என்று பாதுகாப்புப் படைத் தளபதி Gen. Jennie Carignan அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

