Calgary யில் நடைபெற்ற ஒற்றுமையான மாநாட்டைத் தொடர்ந்து, Conservatives கட்சியினரும் அதன் தலைவர் Pierre Poilievre கூடுதல் உத்வேகத்தைப் பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும், நாடாளுமன்றத்தில் பிரதமர் Mark Carney மற்றும் Liberal கட்சியினரை விஞ்சுவதற்கு Conservatives கட்சி இன்னும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
Conservatives கட்சியினர் தங்களின் மூன்று நாள் தேசிய மாநாட்டை சனிக்கிழமையன்று கட்சி ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் நிறைவு செய்தனர். இதில் பிரதிநிதிகளிடமிருந்து 87.4 சதவீத ஆதரவைப் பெற்று, தனது தலைமைப் பதவிக்கான மீளாய்வில் Poilievre எளிதாக வெற்றி பெற்றார்.
கடினமான 2025-ம் ஆண்டில் கட்சியின் வாக்கு வங்கி அதிகரித்த போதிலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது. இதனால் Conservatives தலைவர் Pierre Poilievre இற்கு கட்சியின் மீது வலுவான பிடி இல்லை என்று எழுந்த பேச்சுக்களுக்கு, இந்த வாக்கெடுப்பு முடிவு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த மாநாட்டின் மூலம் Poilievre கட்சியின் மீது முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், அடுத்த தேர்தலை நோக்கிச் செல்லும்போது Conservatives கட்சியினர் குறைந்தபட்சம் அவருக்குப் பின்னால் ஒற்றுமையாக அணிதிரண்டு நிற்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது, என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

