16.8 C
Scarborough

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது ஊடக நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வழிகாட்டி!

Must read

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களின் தலைமையில் செவ்வாய்கிழமை 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடிய குழுக் கூட்டத்தின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அச்சு, இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களின் சிறந்த நலனுக்கு முன்னுரிமை வழங்குதல், உண்மைத்தன்மை மற்றும் நியாயத்தன்மையைப் பேணுதல், அத்துடன் சிறுவர்களையும் அவர்களது குடும்பங்களையும் தேவையற்ற வகையில் வெளிப்படுத்துவதைத் தவிர்த்தல் ஆகியவை இந்த் தேசிய வழிகாட்டியின் பிரதான நோக்கங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

அத்துடன், இயலாமையுடைய சிறுவர்கள் தொடர்பான ஊடக அறிக்கையிடலின்போது அவர்களது கண்ணியம் மற்றும் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.

இதனிடையே, தமிழ் மொழி பேசும் பிரதேசங்களில் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவுகளை வலுப்படுத்துவதற்காக தமிழ் மொழியைப் பயன்படுத்தக்கூடிய பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்து பயிற்றுவிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் பெண்களும் சிறுவர்களும் தமது முறைப்பாடுகளை முன்வைக்கும்போது எதிர்கொள்ளும் மொழிசார் சிரமங்களைத் தவிர்ப்பதே இதன் நோக்கமாகும்.

நாடு முழுவதும் இயங்கும் சிறுவர் இல்லங்களின் நிர்வாகம் மற்றும் கண்காணிப்பை முறையாக மேற்கொள்வதற்காக மத்தியப்படுத்தப்பட்ட தகவல் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியமும் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. சிறுவர்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்காக குறித்த நிறுவனங்களின் நிர்வாகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் குழு சுட்டிக்காட்டியது.

மேலும், ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களைக் கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் செல்வது தொடர்பில் காணப்படும் விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இது தொடர்பில் தொழில்நுட்பக் குழுவொன்றின் ஊடாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள பெண்களின் பிள்ளைகளுக்கான கல்விச் செலவுகளை மீளச் செலுத்தும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article