அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரும், மன்னர் சார்ல்ஸ் அவர்களின் வரவிருக்கும் அரசுமுறை பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் கலந்து கொண்டிருந்த போது திடீரென துப்பாக்கிச் சத்தம் கேட்கப்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
விழா மண்டப நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் நபர், 31 வயதான கலிபோர்னியாவின் டோரன்ஸை சேர்ந்த கோல் அலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் உடனடியாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். ஆனால் அவர் அணிந்திருந்த குண்டு தாங்கும் கவசம் காரணமாக உயிர் தப்பினார் என்று டிரம்ப் தெரிவித்தார். இதர யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இந்த பாதுகாப்பு சிக்கல் பின்னணியில், மன்னர் சார்ல்ஸ் மற்றும் ராணி அமெரிக்கா பயணம் மேற்கொள்வது குறித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இருப்பினும், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், திட்டமிட்டபடி நான்கு நாள் அரசுமுறை பயணம் நடைபெறும் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

