இலங்கையில் நீண்டகாலமாக நடைமுறையிலிருந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2025-ஆம் ஆண்டில் நாட்டின் வாகன இறக்குமதி செலவினம் வரலாற்றில் மூன்றாவது மிக உயர்ந்த மட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார மீளாய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தனியார் வாகன இறக்குமதிக்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் அரசாங்கம் நீக்கியது. பல ஆண்டுகளாக நிலவிய தடையின் காரணமாக ஏற்பட்ட தேக்க நிலை மற்றும் பொருளாதார மீட்சி ஆகிய காரணிகளால், வாகனங்களுக்கான கேள்வி கடந்த ஆண்டு எதிர்பாராத விதமாக அதிகரித்தது.
2025-ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்காக இலங்கை 2.04 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
குறிப்பாக 2025 ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தனியார் மற்றும் வணிக ரீதியான வாகனங்களின் இறக்குமதி கணிசமாக உயர்ந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் வாகன இறக்குமதிக்காக அதிகளவு செலவிடப்பட்ட ஆண்டுகளில் 2025-ஆம் ஆண்டு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

