கிளீன் ஸ்ரீலங்கா தேசிய திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்கு பாதுகாப்பான, சுகமான மற்றும் நம்பகமான பயண வசதிகளை வழங்கும் நோக்கில் குறைந்த தரை உயரம் கொண்ட பேருந்து சேவை இன்று செவ்வாய்க்கிழமை (21) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடி திட்டம் மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மையம் மையத்தில் இன்று தொடங்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ், சக்கர நாட்காலியை பயன்படுத்தும் பயணிகள், பார்வைத்திறன் குறைபாடு கொண்டவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் உள்ளிட்ட சிறப்பு தேவைகள் உள்ளவர்கள் எளிதில் ஏறக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட 10 சிறப்பு பஸ்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பஸ் வண்டியிலும் சுமார் 30 பயணிகள் அமரக்கூடிய வசதி உள்ளதுடன், சக்கர நாற்காலியை பயன்படுத்தும் பயணிகளுக்காக தனிப்பட்ட இருக்கைகள் மற்றும் இடவசதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த பஸ் சேவை ஆரம்ப கட்டமாக கொழும்பு கோட்டை மற்றும் கடவத்தை நோக்கி மாகும்புரவிலிருந்து இயக்கப்படுகின்றது. குறிப்பாக தேசிய வைத்தியசாலை மற்றும் மகரகம அபெக்ஷா வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய சுகாதார நிலையங்கள் உள்ள வழித்தடங்களும் இந்த பஸ் சேவை இயக்கப்படும் மார்க்கத்தில் அடங்குகின்றன.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்பு தேவைகள் கொண்ட பயணிகளுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் முக்கிய முயற்சியாக இந்த திட்டம் கருதப்படுகிறது.

