12.3 C
Scarborough

பாகிஸ்தானுக்கு முதன்முறையாக அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்த இலங்கை!

Must read

இலங்கையின் விவசாய ஏற்றுமதித் துறையில் புதியதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது புதிய அன்னாசிப்பழத் தொகுதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) அனுப்பி வைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

20 அடி கொள்ளளவு கொண்ட கொள்கலன் மூலமாக இந்த முதலாவது அன்னாசிப்பழத் தொகுதி சீ ஆர் எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தினால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் தேசிய தாவர பாதுகாப்பு நிறுவனங்களுக்கு இடையே இடம்பெற்ற உயர்மட்ட தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் மற்றும் கடுமையான தாவர சுகாதார நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த பின்னரே இந்த ஏற்றுமதி வாய்ப்பு சாத்தியமாகியுள்ளது.

பாகிஸ்தான் தேசிய தாவர பாதுகாப்பு நிறுவனத்தின் பூச்சியியல் ஆராய்ச்சியாளரான மொஹமட் அகீத் இலங்கைக்கு வருகை தந்து, நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள அன்னாசிச் செய்கை நிலங்கள் மற்றும் பொதியிடும் மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னரே இந்த இறக்குமதி செய்வதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளார்.

ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து அன்னாசிப்பழங்களும் நல்ல விவசாய நடைமுறைகளின் கீழ் சான்றளிக்கப்பட்ட பண்ணைகளிலிருந்து மாத்திரமே பெறப்பட வேண்டும் என்பதுடன், ஏற்றுமதியில் ஈடுபடும் அனைத்து ஏற்றுமதியாளர்களும் இலங்கை விவசாயத் திணைக்களத்தில் பதிவு செய்திருப்பது கட்டாயமானதாகும்.

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, பாகிஸ்தானிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், வர்த்தகத் திணைக்களம், விவசாயத் திணைக்களம் மற்றும் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை ஆகிய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இந்தத் திட்டத்துக்குரிய அனைத்து வசதிகளையும் ஒருங்கிணைப்புகளையும் செய்து கொடுத்துள்ளன.

சுமார் 252 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட பாகிஸ்தான், ஆண்டிற்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 2,000 முதல் 5,000 மெட்ரிக் தொன் வரையிலான அன்னாசிப்பழங்களை சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்கிறது.

தற்போது தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளே அந்த சந்தையை பெருமளவில் கட்டுப்படுத்தி வரும் நிலையில், இலங்கை அன்னாசிப்பழங்களின் தனித்துவமான சுவை, புத்துணர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான புவியியல் ரீதியிலான அண்மைத்தன்மை என்பவற்றின் காரணமாக பாகிஸ்தான் சந்தையில் பெரும் வரவேற்பையும் வர்த்தக வாய்ப்பையும் பெற முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2025 ஆம் ஆண்டில் இலங்கை அன்னாசி ஏற்றுமதி மூலமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தைப் பெற்றுள்ளதோடு, இந்த வெற்றியின் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் ஆனைகொய்யா மற்றும் ஆரஞ்சு ஆகியவற்றை பாகிஸ்தான் சந்தைக்கு அறிமுகப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article