21.8 C
Scarborough

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக ‘H5N1’ பறவைக் காய்ச்சல் அடையாளம்!

Must read

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முறையாக கடல் பறவை ஒன்றுக்கு ‘H5N1’ ரக பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.

மேற்கு அவுஸ்திரேலியாவின் தலைநகரான பேர்த்திற்கு தென்கிழக்கே சுமார் 570 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எஸ்பெரன்ஸ் என்ற நகருக்கு அருகில் நோய்வாய்ப்பட்டிருந்த பறவை ஒன்றை பரிசோதித்ததில் இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை உலகிலேயே பறவை காய்ச்சல் தொற்று பரவாத ஒரே கண்டமாக அவுஸ்திரேலியா இருந்து வந்தது. எனினும், அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்பில் இருந்து சுமார் 4,100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சப்-அண்டார்டிக் தீவான ஹேர்ட் தீவில் கடந்த 2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டிருந்தது.

தற்போதைய சூழல் குறித்து சிட்னியில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த பிரதமர் அல்பானிஸ், “இந்த தொற்று நிலைமை கவலையளிக்கிறது. இதன் பரவலைக் கட்டுப்படுத்த எமது அரசாங்கம் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என உறுதியளித்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய விவசாயத்துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ், இந்த வைரஸ் இன்னும் அவுஸ்திரேலியாவின் கோழி வளர்ப்பு அல்லது விவசாயத் துறைகளுக்குள் பரவவில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு பறவைகள் பெருமளவில் உயிரிழந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வைரஸ் மனிதர்களுக்கு பரவும் சாத்தியக்கூறுகள் மிகவும் அரிதானவை என்ற போதிலும், கடந்த சில ஆண்டுகளில் உலகளவில் கோடிக்கணக்கான பறவைகள் இதன் காரணமாக அழிக்கப்பட்டுள்ளன. இது உலகளாவிய உணவு விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலையையும் உயர்த்தியிருந்தது.

பறவை காய்ச்சல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, அவுஸ்திரேலியா தனது பண்ணைகளில் உயிரியல் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், பறவைகளுக்கான தடுப்பூசி திட்டங்கள் மற்றும் அவசரகால பாதுகாப்பு திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article