Bank of Canada ஆளுநர் Tiff Macklem பொருளாதாரத்தைப் பாதிக்கும் மாற்றங்களுக்கு ஏற்ப வணிகங்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் தோல்வியைத் தழுவ நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.
வியாழக்கிழமையன்று Toronto வில் உள்ள Empire Club of Canada வில் உரையாற்றிய Macklem, அமெரிக்க வரிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைவான மக்கள் தொகை வளர்ச்சி போன்ற கட்டமைப்பு மாற்றங்கள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அங்கு கூடியிருந்த வணிகர்களிடம் விளக்கினார்.
அமெரிக்காவின் பாதுகாப்புவாதக் கொள்கைகளால் வணிகங்கள் தங்கள் முதலீடுகள் மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கும் அதே வேளையில், புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதிலும் அவை மந்தமாகவே செயற்பட்டு வருவதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார்
வர்த்தக ரீதியிலான நிச்சயமற்ற தன்மை குறைந்து, வணிகங்கள் புதிய தொழில்நுட்பங்களிலும் சந்தைகளிலும் விரைவாக முதலீடு செய்தால், மத்திய வங்கி எதிர்பார்க்கும் பொருளாதார மாற்றம் திட்டமிட்டதை விட விரைவில் நிகழக்கூடும் என்று Macklem தெரிவித்தார்.
அதே வேளையில், பொருளாதாரம் இந்த மாற்றங்களுக்கு ஏற்ப மாறத் தவறினால், மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் உற்பத்தித்திறன் மீளாமல் போகலாம் என்றும் அவர் எச்சரித்தார். இது வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய வளர்ச்சியில் பின்னடைவை ஏற்படுத்தி, கனடாவை வாழ்வதற்கு அதிக செலவுமிக்க நாடாக மாற்றக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதனையே எம்மால் தாங்கிக்கொள்ள முடியாது. அதனால்தான் நாம் இந்த கட்டமைப்பு மாற்றங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டும், என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

