நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் கிளர்ச்சியாளர்களை இலக்கு வைத்து அந்நாட்டு இராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக குடியிருப்பாளர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நைஜீரிய இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் சானி உபா கூறுகையில், போர்னோ மாநிலத்தில் உள்ள ஜில்லி பகுதிக்கு அருகில் கைவிடப்பட்ட ஒரு கிராமத்தில் அமைந்திருந்த பயங்கரவாதிகளின் தளம் மற்றும் தளவாட மையம் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அங்கிருந்த ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் இதற்கு முற்றிலும் மாறுபட்ட தகவலைத் தெரிவித்துள்ளனர். குண்டுவீச்சு நடத்தப்பட்ட இடம் கைவிடப்பட்ட பகுதி அல்ல என்றும், நூற்றுக்கணக்கான மக்கள் கூடும் ஒரு வாராந்த சந்தையிலேயே குண்டுகள் விழுந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை விட மிக அதிகம் என்றும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“நான் மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசினேன், குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதை அவர்கள் உறுதிப்படுத்தினர்” என்று நைஜீரியாவிற்கான அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் இசா சனுசி தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சபை உறுப்பினர் மாலம் லவான் சன்னா கூறுகையில், “இன்னும் உடல்கள் மீட்கப்பட்டு வருவதால் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து உறுதியாகக் கூற முடியாது. ஆனால், நான் பேசும் இந்த நேரத்தில், சந்தை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் சமீபத்திய மாதங்களில் வன்முறைத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இராணுவத்திற்கும், போகோ ஹராம் மற்றும் ஐ.எஸ்.டபிள்யூ.ஏ.பி (ISWAP) ஆகிய பயங்கரவாதக் குழுக்களுக்கும் இடையே மோதல்கள் தீவிரமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

