சித்திரை புத்தாண்டு காலத்தில் பாரம்பரிய இனிப்புப் பண்டங்களை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் கட்டுப்படுத்த மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விசேட மருத்துவ நிபுணர் மனில்க சுமனதிலக்க இவ்விடயத்தை வலியுறுத்தினார்.
பாற்சோறு, கெவும், கொக்கிஸ், அலுவா போன்ற பாரம்பரிய இனிப்புப் பண்டங்கள் இன்றி புத்தாண்டு இல்லை என்பது உண்மை. எனினும், ஒரு வேளைக்கு ஒரு வகை இனிப்புப் பண்டத்தை மாத்திரம் உட்கொள்ளப் பழகுங்கள்.
உதாரணமாக, கெவும் உண்பதற்குப் பதிலாக ஒரு துண்டு அலுவா அல்லது ஒரு துண்டு பாற்சோற்றை மாத்திரம் உட்கொள்ளலாம்.
பாலுடன் கலந்த தேநீருக்குப் பதிலாக, சீனி சேர்க்காத கறுப்புத் தேநீரை அருந்துவது சிறந்தது.
உறவினர் வீடுகளுக்குச் செல்லும் போது, ஏற்கனவே உணவருந்திவிட்டதாகக் கூறி, உங்களுக்கு விருப்பமான ஏதேனும் ஒரு இனிப்புப் பண்டத்தை மாத்திரம் தேர்ந்தெடுத்து உட்கொள்ளுங்கள்.
இவ்வாறான சிறிய மாற்றங்களைச் செய்வதன் மூலம், பண்டிகைக் காலத்தில் இரத்தத்தில் சீனி அளவு சடுதியாக அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தி, ஆரோக்கியமாகப் புத்தாண்டைக் கொண்டாட முடியும் என மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டியுள்ளார்.
