இலங்கையில் “ஏஹிபஸ்சிகோ” எனும் பெயரில் முன்னெடுக்கப்பட்ட அமைதிக்கான நடைப்பயணம் நிகழ்வில் பங்கேற்ற வியட்நாம் தேரர்கள் உள்ளிட்ட குழுவினர், இன்று புதன்கிழமை (29) காலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா நோக்கிப் புறப்பட்டனர்.
அமெரிக்காவில் வசிக்கும் வியட்நாம் தேசத்தைச் சேர்ந்த பன்னாகர மற்றும் ரதனகுண ஆகிய தேரர்கள் உள்ளிட்ட குழுவினரும், அவர்களுடன் இந்த நடைப்பயணத்தில் இணைந்திருந்த “ஆலோகா” என்ற செல்லப் பிராணியான நாயும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தின் விசேட விருந்தினர் முனையத்தை வந்தடைந்தனர்.
அங்கு அவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டதுடன், விமான நிலையப் பணியாளர்கள் பலர் தேரர்களை வணங்கி ஆசி பெற்றனர்.
இந்தக் குழுவினருடன் பயணித்த “ஆலோகா” நாய்க்குப் பயண அனுமதி வழங்குவதற்காகப் கால்நடை வைத்தியர்கள், விமான நிலைய பொலிஸார் மற்றும் விமானப்படை அதிகாரிகள் விசேட கவனம் செலுத்திப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நடைப்பயணத்தில் ஒரு அங்கமாக அந்த ஆலோகா என்ற நாய் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 07.12 மணியளவில் துருக்கியின் இஸ்தான்புல் நகரை நோக்கி, டர்கிஷ் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான TK-731 என்ற விமானம் மூலம் இக்குழுவினர் புறப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் மற்றுமொரு விமானம் மூலம் அமெரிக்கா சென்றடையவுள்ளனர்.
இலங்கையின் பல்வேறு பகுதிகளின் ஊடாக உலக அமைதியை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இந்த நடைப்பயணம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் கவனத்தை ஈர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
