ஹட்டன் – டிக்கோயா பிரதான வீதியின் பட்டல்கலை பகுதியில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டயகமவிலிருந்து போடைஸ் ஊடாக ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்றே, பிற்பகல் 3 மணியளவில் பட்டல்கலை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளானது.
எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சுமார் 25 அடி பள்ளத்தில் வீழ்ந்து கவிழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்த 22 பேர் டிக்கோயா கிளங்கன் அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பாடசாலை மாணவர்கள், பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் ஆகியோரும் அடங்குவர்.
விபத்து இடம்பெற்ற வேளையில் பேருந்தில் சுமார் 35 பயணிகள் வரை பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
