ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இலங்கையின் கண்டியில் உள்ள பல்லேகலே மைதானத்தில் ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் மோதுவதாக இருந்தது. ஆனால் இந்த ஆட்டம் மழை காரணமாக ஒருபந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 5 புள்ளிகளுடன் தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது. அந்த அணி 2 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. இதே பிரிவில் முன்னாள் சாம்பியனான இலங்கை அணி 6 புள்ளிகளுடன் ஏற்கெனவே சூப்பர் 8 சுற்றில் கால்பதித்து இருந்தது.
ஜிம்பாப்வே – அயர்லாந்து அணிகள் இடையிலான ஆட்டம் ரத்து ஆனதால் இதே பிரிவில் இடம் பெற்றிருந்த முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இதனால் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறுகிறது.
மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3 ஆட்டங்களில் 2 தோல்வி, ஒரு வெற்றியை பதிவு செய்திருந்தது. லீக் சுற்றை 3 புள்ளிகளுடன் நிறைவு செய்த அயர்லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது.

