ஹோமாகம, மாகம்மான, சமகி மாவத்தையில் நேற்று (13) இரவு தாயின் காதலனால் தாக்கப்பட்டதில் மூன்று வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறுமி பிறந்தவுடன் அவரது தந்தை குடும்பத்தை விட்டு வெளியேறிய நிலையில், அவரது தாய் சுமார் நான்கு மாதங்களாக சந்தேக நபருடன் உறவில் இருந்துள்ளார்.
குறித்த நபர் அடிக்கடி வீட்டுக்கு வந்து பல நாட்கள் தங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி, தன்னை தந்தை என அழைக்க மறுத்ததால் சந்தேக நபர் கோபமடைந்து பல சந்தரப்பங்களில் அவரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தாயும் இதற்கு ஆதரவாக இருந்துள்ளதோடு, 12ஆம் திகதி இரவு வீட்டுக்கு வந்த சந்தேக நபர் நேற்று (13) அதிகாலையில் மீண்டும் சிறுமியைத் தாக்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி சந்தேக நபர் புதிய வீடொன்றை தேடும் போர்வையில் குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மாலை அவர்கள் வீடு திரும்பியபோது, சிறுமி ஒவ்வாமை அல்லது உடல் ரீதியான அசௌகரியத்தால் பாதிக்கப்பட்டது போல் தெரிந்துள்ளது.
சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வாகனத்தை தயார் செய்வதாக கூறிவிட்டுச் சென்ற சந்தேக நபர் வீடு திரும்பாத நிலையில், சிறுமியின் தாய் அவரை ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றநிலையில், சிறுமி உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம் இருப்பதால் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் சந்தேக நபர் சிறுமியைக் கொலை செய்ய தாயும் அனுமதித்திருக்கலாம் எனும் கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிறுமியின் தாய் கெஸ்பேவ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதோடு, தப்பியோடிய சந்தேக நபரை தேடும் பணிகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

