‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ படத்தின் மூலம் தேசிய அளவில் கவனம் ஈர்த்த இயக்குநர் ஆதித்யா தர், அடுத்து கையில் எடுத்துள்ள ஓர் அதிரடியான ஆக்ஷன் களமே ‘துரந்தர்’. ஏற்கெனவே திரையரங்குகளில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றாலும், தற்போது ஓடிடியில் ரிலீஸாகி உலக அளவில் பேசுபொருளாகி இருக்கிறது இப்படம்.
90-களின் இறுதியில் இந்தியாவில் நடந்த சில பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு, அதில் சில கற்பனைகளையும் கலந்து, ஒரு முழுமையான கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லர் படத்தை கொடுத்துள்ளார் ஆதித்யா தர்.
பாகிஸ்தானின் லியாரி என்ற பகுதியில் இருந்துகொண்டு இந்தியாவில் நடத்தப்படும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உதவி செய்யும் ஒரு கும்பலுக்குள் இந்தியாவிலிருந்து ஓர் உளவாளியை (ரன்வீர் சிங்) அனுப்புகிறார் இந்திய உளவுத்துறை தலைவர் அஜய் சன்யால் (மாதவன்). அங்கு ரஹ்மான் டகைட் (அக்ஷய் கண்ணா) தலைமையிலான பலூச் கும்பலுக்குள் ஊடுருவும் நாயகன், அவர்களின் சதியை முறியடித்தாரா என்பதே ‘துரந்தர்’ படத்தின் கதை.

