இந்தியாவின் சத்தீஷ்கரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதலில் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்தியாவின் சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. நக்சலைட்டுகளைக் கட்டுப்படுத்த மாநில பொலிஸாருடன் இணைந்து மத்திய பாதுகாப்புப்படையினரும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சத்தீஷ்கரின் ஹரியபெண்ட் மாவட்டத்தில் ஒடிசா எல்லையையொட்டிய வனப்பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் நேற்று (20) இரவு முதல் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது, அங்கு பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் திடீர் துப்பாக்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தினர். இதையடுத்து சுதாரித்துக்கொண்ட பாதுகாப்புப்படையினர் பதிலடி தாக்குதலை நடத்தினர்.
இன்று (21) அதிகாலை வரை துப்பாக்கிச் சூடு நீடித்தது. இந்த துப்பாக்கி சூட்டில் நக்சலைட்டுகள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட நக்சலைட்டுகளில், தலைக்கு 1 கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட நக்சலைட்டும் சுடப்பட்டுள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்ததுப்பாக்கிச் சூட்டின் போது பாதுகாப்புப்படை வீரரும் காயமடைந்தார்.