காசாவில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் இடையில் நடைபெற்று வந்த போரானது கடந்த 2025 அக்.10 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இருதரப்பும் போர்நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்றுக்கொண்டதன் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீ து இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டபின்பும் இஸ்ரேலின் தாக்குதல்களில் இதுவரை 556 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 1500 பேர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காசாவின் பல்வேறு பகுதிகளில் இன்று (பிப். 4) காலை முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 2 பச்சிளம் குழந்தைகள், 3 குழந்தைகள் மற்றும் 7 பெண்கள் உள்பட 24 பேர் கொல்லப்பட்டனர்.
கிளர்ச்சிப்படையினர் தாக்கியதால் இஸ்ரேலிய வீரர் ஒருவர் படுகாயமடைந்ததற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.
“காசா பகுதியில் எங்கள் மக்களுக்கு எதிரான இனப்படுகொலைப் போர் தொடர்கிறது என்று காசா நகரத்தின் ஷிபா மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் முகமது அபு செல்மியா ஒரு பேஸ்புக் பதிவில் தெரிவித்தார். “போர்நிறுத்தம் எங்கே? மத்தியஸ்தர்கள் எங்கே? என கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னதாக, 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த காசா மீதான இஸ்ரேலின் போரில் 2 ஆண்டுகளில் மட்டும் 71,800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.