மேஷம்
ராசிநாதன் செவ்வாய் பகவான் உச்ச நிலையில் சஞ்சரிப்பது ஆற்றலையும் மனோபலத்தையும் வழங்கும். லாப ஸ்தான கிரகங்களின் சேர்க்கை, நீண்ட கால விருப்பங்கள் யாவும் நிறைவேறப்போவதைக் குறிக்கிறது.
பழைய முதலீடுகள் அல்லது சட்ட ரீதியான வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான சுப செய்திகள் வந்து சேரும். குடும்ப உறவுகளில் இணக்கமான சூழல் நிலவும். அரசியல் பிரமுகர் சந்திப்புகள் சமூக அந்தஸ்தை உயர்த்தும்.
தொழில் ரீதியாக இது ஒரு பொற்காலம். வணிக முயற்சிகள் புதிய உச்சத்தைத் தொடும். புதிய கிளைகளைத் தொடங்க இது மிகச் சிறந்த தருணம். நிதிநிலை சீராக இருப்பதுடன் பல வழிகளில் இருந்து பணவரவு உண்டாகும்.
ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகளைத் தவிர்க்கவும். அனுமனுக்குச் செவ்வரளி மலர் சாற்றி வழிபடுவது, தினசரி சூரிய நமஸ்காரம் செய்வது தனிப்பட்ட சாதனை செய்ய உதவும்.
ரிஷபம்
தொழில் ஸ்தானத்தில் நிலவும் கிரக நிலைகள், வாழ்க்கையில் முக்கிய முன்னேற்றப் பாதையை வகுத்துக் கொடுக்கும். சமூக அந்தஸ்தில் நிலையான உயர்வும், நிலுவையில் இருந்த அரசு காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.
பதவி உயர்வு, புதிய தலைமைப் பொறுப்பு குறித்த நற்செய்திகளை எதிர்பார்க்கலாம். குடும்ப உறுப்பினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார மட்டத்தில் உள்ளவர்களுடன் பேசும்போது நிதானம் அவசியம்.
சுக்கிரன்-புதன் சேர்க்கையால் தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறையில் இருப்பவர்களுக்குப் புத்திசாலித்தனம் மிளிரும். லாபம் பெருகும். நிதிநிலை ஸ்திரமாக இருக்கும்.
தொண்டை, கழுத்து தொடர்பான சிறு உபாதைகள் தோன்றி மறையும். சனீஸ்வரனுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடுவதும், மகா மிருத்யுஞ்சய மந்திரத்தைப் பாராயணம் செய்வது, சரிவிகித உணவு, போதிய உறக்கம் ஆகியவை நல்லது.

