ரஷ்யா இதுவரை இல்லாத அளவில் தற்போது அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் நேற்று அறிவித்துள்ளது.
உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது நீண்ட தூர ஏவுகணை தாக்குதல்களை ரஷ்யா முடுக்கிவிட்டிருக்கிறது. குறிப்பாக கீவ் நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் இடைவிடாமல் தாக்குதல் நடந்தது. வானில் ஏவுகணை, டிரோன் குண்டுவெடிப்புகள் ஒளிர்ந்தபடி இருந்தன.
இரவு முழுவதும் 550 டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டது. இதில் 23 பேர் காயம் அடைந்தமை தெரியவந்துள்ளதாக உக்ரைன் மேலும் தெரிவித்துள்ளது.
இதுபற்றி உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறும்போது, “சைரன்கள் அலறிக்கொண்டே இருந்ததால் இது ஒரு கடினமான இரவாக அமைந்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாமிடிர் புட்டின், அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பேசிக்கொண்டிருந்த அதே சமயத்தில் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை என்பது தெளிவாகி உள்ளது” என்றார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்த போரை நிறுத்துவதற்காக கடும் முயற்சிகள் செய்து வருகிறார் என தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக துருக்கியில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகள் இரு முறை பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை. இரு நாடுகளும் மாறி மாறி சரமாரியாக ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.