7.4 C
Scarborough

வெற்றியை கோட்டை விட்ட நெதர்லாந்து!

Must read

கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடந்த ஐசிசி 2026 உலகக் கோப்பை டி20 தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி தட்டுத் தடுமாறி வென்றது. நெதர்லாந்து முதலில் பேட் செய்து 147 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் இலக்கை விரட்டி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து போராடி வென்றது.

ஒரு கட்டத்தில் 11 ஓவர்களில் 98 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து நன்றாக ஆடி வந்த பாகிஸ்தான் அணி, மீகெரனின் ஓர் அபார ஓவரினால் தடுமாற்றமடைந்தது.

12-வது ஓவரில் நல்ல வேகம் வீசக்கூடிய மீகெரன் அந்தக் குறிப்பிட்டப் பந்தை 126 கிமீ வேகத்தில் வீச, ஷார்ட் பிட்ச் பந்தான அதை, பாகிஸ்தான் தொடக்க வீரர் ஷாகிப்சாதா ஃபர்ஹான் புல் ஷாட் ஆட, லாங் ஆனில் வான் டெர் மெர்வ் டைவ் அடித்து திகைப்பூட்டும் கேட்ச் ஒன்றை எடுத்தார்.

நன்றாக ஆடி வந்த ஃபர்ஹான் 31 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 47 ரன்களில் வெளியேற, அதே ஓவரில் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் அதே ஓவரில் மீகெரென் வீசிய பேக் ஆஃப் லெந்த் பந்தை ஆஃப் திசையில் பஞ்ச் ஆட முயல, பந்து மட்டையின் உள்விளிம்பில் பட்டு ஸ்டம்பைத் தாக்கியது. உஸ்மான் கான் டக் அவுட்.

பாபர் அசாம் அடுத்ததாக பொறுப்புடன் ஆடி வெற்றி பெறச் செய்ய வேண்டியவர். அவர் 15 ரன்களில் வான் டெர் மெர்வ் ஸ்பின் பந்தை லாங் ஆஃப் மேல் தூக்கி அடிக்க முயன்று டீப்பில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

12.4 ஓவர்களில் 100/5 என்று ஆன பாகிஸ்தான் குட்டி சரிவைச் சந்தித்தது. முகமது நவாஸ் கிளைன் பந்தில் 6 ரன்களில் வெளியேற, பாகிஸ்தானுக்கு மிக மிக முக்கிய வீரரான ஷதாப் கான் 17-வது ஓவர் முதல் பந்தில் வெளியேற, பாகிஸ்தான் 114/7 என்று தோல்வி முகம் கண்டது.

3 ஓவர்களில் 33 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. 18-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மீகெரன் வீச, 4 ரன்களே வந்தது. 2 ஓவர்களில் 29 ரன்கள் என்ற நிலையில், ஃபாஹிம் அஷ்ரப்பும், ஷாஹின் அஃப்ரீடியும் கிரீசில் இருந்தனர்.

அப்போதுதான் அந்த விதிவசமான ஓவரை வீச வந்தார் வேகப்பந்து வீச்சாளர் வான் பீக். முதல் பந்தை ஃபாஹிம் அஷ்ரப் மிட்விக்கெட் மேல் பெரிய சிக்சர் அடித்தார். அடுத்த பந்து ஃபுல்டாஸ். பாஹிம் அஷ்ரப் அதை லாங் ஆஃப் மீது தூக்கி அடிக்கும் முயற்சி சரியாக அமையாமல் கேட்ச் ஆகச் சென்றது; ஆனால் அங்கு நின்றிருந்த ஓதவ்த் கையில் வந்த கேட்சை கோட்டை விட்டார். கேட்சை மட்டும் அல்ல, மேட்சையே கோட்டை விட்டார் ஓதவ்த்.

வான் பீக் மீண்டும் ஸ்லாட்டில் வீச, ஒரு சிக்ஸ். மறுபடியும் ஒரு யார்க்கர் ரன் இல்லை, ஆனால் அடுத்த பந்து மீண்டும் சிக்ஸ். கடைசி பந்து தேர்ட் மேனில் பவுண்டரி.

ஒரே ஓவரில் 24 ரன்கள் வர, 20-வது ஓவரில் வெற்றிக்குத் தேவை 5 ரன்களே. கடைசி ஓவரை டீலீட் வீச, 3-வது பந்தை பாஹிம் அஷ்ரப் கவரில் பவுண்டரிக்கு விரட்ட, பாகிஸ்தான் தோல்வியின் பிடியிலிருந்து ஒரே ஓவர் ஒரு ட்ராப் கேட்சினால் வெற்றி பெற்றது.

ஒரே ஓவரில் போட்டியை கோட்டை விட்டது நெதர்லாந்து. முன்னதாக நெதர்லாந்து அணி ரெகுலர் இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததனால் 8-வது ஓவரிலேயே 65/3 என்று ஆனது. இத்தனைக்கும் ஷாஹின் அஃப்ரீடி சரியாக வீசவில்லை. சல்மான் தான் அற்புதமாக வீசினார். லெவிட் 24 ரன்களில் வெளியேற, நெதர்லாந்தின் நம்பிக்கை வீரர் ஓதவ்த் 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

டீலீட் 30 ரன்களையும் ஆக்கர்மேன் 20 ரன்களையும் கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 37 ரன்களையும் எடுக்க நெதர்லாந்து 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சல்மான் மிர்ஸா 3 விக்கெட்டுகளையும் நவாஸ், அப்ரார் அகமது சயிம் அயூப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

நெதர்லாந்து தரப்பில் மீகெரன் அதியற்புதமாக வீசி 4 ஓவர் 20 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஆட்ட நாயகனாக ஃபாஹிம் அஷ்ரப் தேர்வு செய்யப்பட்டார். ஃபாஹிம் அஷ்ரப் 11 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் விளாசினார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article