அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையிலும், லெபனானில் உள்ள ஹெஸ்புல்லா அமைப்பினர் மீது “தேவைப்படும் இடங்களில் எல்லாம்” இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது. இருப்பினும், லெபனான் மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் ஒப்பந்தத்தை “கடுமையாக மீறும்” செயல் என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக நெதன்யாகு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“எங்கள் செய்தி மிகவும் தெளிவானது: இஸ்ரேலிய குடிமக்களுக்கு எதிராக செயல்படும் எவரும் இலக்கு வைக்கப்படுவார்கள். இஸ்ரேலின் வடக்கு பகுதி குடியிருப்பாளர்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்யும் வரை, ஹெஸ்புல்லா அமைப்பினர் மீது தேவையான இடங்களில் தாக்குதல் தொடரும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஹெஸ்புல்லா அமைப்பின் பொதுச்செயலாளர் நைம் காசிமின் மருமகனும், அவரது தனிப்பட்ட செயலாளருமான அலி யூசுப் ஹர்ஷி என்பவரை இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் சுட்டுக்கொன்றதாக அறிவித்த சில மணி நேரங்களில் பிரதமர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

