தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இழுபறிக்குள்ளாகியுள்ளது.
சுவிஸ் அரசின் ஏற்பாட்டில் எதிர்வரும் 19 ஆம் திகதி மேற்படி சந்திப்பு கொழும்பில் நடைபெற இருந்தது.
சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் ஏற்பாட்டிலான இந்த சந்திப்பில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஆகிய கட்சிகளும், சிவில் சமூகத்தின் சார்பில் மூத்த சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும் பங்கேற்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அரசியல் தீர்வு குறித்து தமிழ்த் தேசிய தரப்புக்கள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வரவேண்டியதன் அவசியத்தை முன்னிறுத்திய கலந்துரையாடல் ஒன்றுக்கு, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் எதிர்வரும் 15 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் இந்த விவகாரத்துடன் தொடர்புடைய 15 வரையான சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கு இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிற்குப் பதிலளித்த தமிழ் அரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், தனிப்பட்ட காரணங்களால் தன்னால் கலந்துரையாடலில் பங்கேற்ற முடியாது என்றும், கட்சியின் பிரதிநிதியொருவரை அனுப்பி வைப்பதாகவும் கூறியதாக கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
இந்த நிலையில், அரசியல்தீர்வு குறித்து கலந்துரையாடும் நோக்கில் 19 ஆம் திகதி தமிழ்த்தேசியக் கட்சிகள் சந்திப்பதற்கு ஏற்பாடாகியிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக சிவில் சமூகத்தின் பங்கேற்புடனான ஒரு கூட்டத்தை கஜேந்திரகுமார் தரப்பு ஏற்பாடுசெய்துள்ள நிலையிலேயே, சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.
எனினும், இதன் பின்னணியில் சுமந்திரன் உள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

